கலைஞர்: நெகிழும் நினைவுகள்

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் அவர் ஏராளமான பேரின் வாழ்வில் முக்கிய சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார். அந்திமழையிடம் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்களைப் பாதித்த, நெகிழ வைத்த, கற்றுக்கொள்ளவைத்த கலைஞர் தொடர்பான நினைவுகளைச் சொல்கிறார்கள்.

அய்யாவிடம் கற்றோம்!

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பாக 1989 - ல் நான் முதல் முதலாக எம்.எல்.ஏவாக தென்காசியில் இருந்து தேர்வாகி இருந்தேன். அப்போது கலைஞர் முதலமைச்சர். நாங்கள் எதிர்க்கட்சி. தினந்தோறும் அவரை எதிர்ப்பதும் வெளிநடப்பு செய்வதும் தான் எங்கள் வேலை. அப்போது திருநெல்வேலியில் மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. அதனால் அங்கிருந்த மாவட்டத் தலைமை மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றும் வாய்ப்பு உருவானது. நான் அந்த மருத்துவமனை என் தொகுதியான தென்காசிக்கு வேண்டும் என்று கேட்டு அதற்கான காரணங்களை எழுதிக் கொடுத்திருந்தேன். அச்சமயம் சட்டமன்றத்தில் அதிமுக ஜானகி அணியின் சார்பாக ஒரே எம்.எல்.ஏவாகத் தேர்வாகி இருந்தவர் பி எச் பாண்டியன்.

அவர் தன் தொகுதியான சேரன் மாதேவிக்கு அந்த மருத்துவமனை வேண்டும் எனக் கோரி இருந்தார். பாண்டியன் அப்போது சட்டமன்றத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டுக் கொண்டிருந்தார். மேலும் சில நாட்கள் கழிந்தன. எதிர்க்கட்சியாக நாங்கள் மோதல் போக்கையே தொடர்ந்துகொண்டிருந்தோம். ஒருநாள் சட்டமன்றத்தில் அமர்ந்திருந்தேன். கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் வந்து முதலமைச்சர் அழைக்கிறார் என்று என்னை கூட்கூட்டிக் கொண்டு போனார். மாடியில் ஓர் அறையில் கலைஞர் அமர்ந்திருந்தார். நான் போனதும் எழுந்து நின்று வரவேற்றார். நானொரு முதல் முறை எம்.எல்.ஏ. என்னைக் கண்டதும் அவர் எழுந்து நின்றது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘‘அய்யா.. அழைத்தீர்களாமே?'' என்றேன். ‘‘நீங்கள் கேட்டபடி தென்காசிக்கே மருத்துவமனையை அளிக்க முடிவு செய்துள்ளேன். அதற்கான ஆணையில் கையெழுத்திட உள்ளேன். அதற்கு முன்பாக உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவோம் என்று அழைத்தேன்,'' என்றார். நான் நெகிழ்வுடன் நன்றியைத்தெரிவித்தேன். அப்புறம் மெல்ல... ‘‘அய்யா, நான் மிகவும் இளையவன். எனக்கெல்லாம் எழுந்து நிற்கிறீர்களே..'' எனக் கேட்டேன். ‘‘இது நாங்கள் அய்யா பெரியாரிடம் கற்றுக்கொண்டது..'' என்றார் புன்னகை மாறாமல்.

ஒப்புதல் பெற்ற தேர்வு

மு.செந்தமிழ்ச் செல்வன், ஓய்வெற்ற கூடுதல் பதிவாளர், கூட்டுறவுத்துறை.

கூட்டுறவுத் துறை அமைச்சராக கோ.சி.மணி பொறுப்பில் இருந்தபோது அவரிடம் சிறப்பு உதவியாளராக பணிபுரிந்தேன். அப்போது ஒரு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறைக்கு ஆட்களை நியமிக்க முறைப்படி தேர்வு நடத்தி பட்டியல் தயாரித்திருந்தோம். அம்மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த இன்னொரு அமைச்சர் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நியமனம் கிடைக்க வில்லை என்று வருத்தம்கொண்டு, அந்த தேர்வுப் பட்டியலை வெளியிடாமல் நிறுத்திவிட்டார். விஷயம் முதல்வராக இருந்த கலைஞர் காதுக்குப் போனது. அவர் அப்போதைய நிதிச்செயலாளரை அழைத்துக் கேட்டார். பட்டியலில் தேர்வானவர்கள் யார்? அதன்படி போடலாமா? என்ற கேள்விக்கு,

‘‘தேர்வுப்படி போட்டால் ஏழ்மையான பின்னணியில் வந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். கட்சிக்காரர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்றால் அப்படி இருக்காது... வசதியானவர்களே அந்த அரசு வேலைக்கு நியமிக்கப்படுவார்கள்.'' என்று நிதிச் செயலர் பதில் சொன்னார். கலைஞர் யோசிக்கவே இல்லை.  ‘‘தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே வேலைக்குச் சேரட்டும்'' எனச் சொல்லி பட்டியலை வெளியிட ஒப்புதல் அளித்துவிட்டார்.

அவர் அளித்த திருமணப் பரிசு

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர்.

என் திருமணம் 1986 -ல் நடந்தது. திருமணத்துக்கு முன்பாக மதுரையில் அன்று வாஜ்பாய், என்.டி.இராமாராவ், எச்.என்.பகுகுணா போன்ற அகில இந்தியத் தலைவர்கள் கலந்து கொண்ட டெசோ மாநாட்டை முன்னிருந்து பணிகளை கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத் தது. அப்போது என்னைப் பார்த்த கலைஞர், உன் திருமணப் பணிகள் சரியா நடக்கின்றனவா என்றும் அக்கறையோடு கேட்டார்.

எனது திருமணம் மயிலாப்பூர் அன்றைய கச்சேரி சாலை, ராஜா திருமண மண்டபத்தில் திரு. பழ.நெடுமாறன் தலைமையேற்க, வைகோ வரவேற்புரை நிகழ்த்த, தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைத்தார்.  சபாரத்தினம் கொலை, மேலவை ஒழிப்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சியில் செய்த கண்காணிப்பு ஆகியவை அப்போதையமுக்கிய அரசியல் பிரச்னைகள்.  இவற்றை திருமணத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள். தலைவர் கலைஞர் உரையாற்றும்போது இந்த பிரச்னைகளையெல்லாம் தொட்டுக்காட்டி பேச்சை முடிக்கையில்,

‘‘ அருமைத் தம்பி இராதாகிருஷ்ணன்,  இனிமேல் இராதாகிருஷ்ணனாக இல்லாமல் சரளாகிருஷ்ணனாக தன்னுடைய இல்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று வாழ்த்துகிறேன்'' என்றார். என் துணைவியார் பெயர் சரளா.  திருமணத்திற்கு மறுதினம் முரசொலியில் அவர் ஆற்றிய உரை முழுவதும் வெளியானது. தலைவர் அவர்கள் காலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து, ‘‘ உன் திருமண நிகழ்ச்சி உரை முழுமையாக முரசொலியில் வந்துள்ளது. நான் மேடையில் உனக்கு திருமணப்பரிசு ஏதும் தரவில்லை. இந்த உரைதான் அந்த பரிசு. படித்துவிட்டு சொல்லப்பா,'' என்றார்.

என் மனைவி 2014 நவம்பரில் மறைந்த அன்று, ‘‘என்னப்பா ராதா, உனது திருமணத்தில் நான்தானே தாலி எடுத்துக் கொடுத்தேன். இப்போது மலர் வளையம் வைக்க வரவேண்டியதாகிவிட்டதே'' என்று விசாரித்ததையும் நினைக்கையில் பொலபொலவென கண்ணீர் வடிகிறது.

எந்தப்பக்கம் பார்க்கிறார் சிவாஜி?

செ. சந்திரசேகர், இ.கா.ப, காவல்துறை தலைவர்(ஓய்வு)

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை கடற்கரைச் சாலையில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சர் கலைஞர்  திறந்துவைக்க அந்த விழா சிறப்பாக நடந்தது. அந்த சிலையை திறப்பதற்கு சிலநாட்கள் முன்பாக  நள்ளிரவில் அந்த சிலையை நிறுவும் பணிகள் நடைபெற்றன. நான் அப்போது  மாநில உளவுத்துறையில்  காவல்கண்காணிப்பாளர் பதவியில் இருந்தேன்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் எங்கள் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் அங்கு சென்று எப்படி பணி நடக்கிறது என்று கவனிப்பார்கள். ஆனால் இந்த சிலை மீது முதலமைச்சரின் தனிப்பட்ட கவனமும் ஆர்வமும் இருக்கிறது என்பதால் நானே நேரடியாக சென்று சிலை நிறுவப்பட்டதைப் பார்வையிட்டேன். நள்ளிரவைத் தாண்டி அந்த வேலை முடிந்தது. நான் இல்லத்துக்குச் சென்றேன். மறுநாள் அதிகாலையில் தொலைபேசி.  ‘‘தலைவர் பேசுகிறார்,'' என்று சொல்லி சற்று இடைவெளி விட்டு தொலைபேசி இணைப்புக் கொடுத்தார்கள். அதில் அந்த கரகரத்த அந்த காந்த குரல் ஒலித்தது: ‘‘ சிலை நிறுவும் ஏற்பாடுகள் முடிந்துவிட்டதா?''

‘‘ அய்யா, சிறப்பாக வேலை முடிந்து உள்ளது'' என்றேன். ஆனால் அத்துடன் அந்த  உரையாடல் முடிந்துவிடவில்லை. அடுத்த கேள்வி நானே எதிர்பார்க்காத கேள்வி: ‘‘ சிலை எந்தப்பக்கம் பார்த்துக்கொண்டிருக்கிறது?''. எங்கள் ஆய்வாளர்கள் சென்று வந்து என்னிடம் சொல்லியிருந்தால் நான் அவர்களிடம் அந்த கேள்வியைக் கேட்டிருக்கமாட்டேன். நல்லவேளை நான் நேரடியாகச் சென்று பார்த்ததால் அந்த கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடிந்தது. தலைவர் சிறுவிஷயமாக இருந்தாலும் கூட எதிலும் கவனமாக இருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.  இந்நிகழ்வில் இருந்து சிறுவிஷயமாக இருந்தாலும் அதில் நேரடிக் கவனம் செலுத்தவேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

அண்ணா வழி; அன்புவழி

பொள்ளாச்சி மா.உமாபதி, மாநில கலை இலக்கிய பகுத்தறிவு அணி

கலைஞர் கருவூலம் அமைத்தபோது சுமார்  ஐந்து மாதங்கள் கலைஞர் அவர்களை அனுதினமும் கண்டு பேசி அவரது கருத்துகளைக் கேட்ட அனுபவப் பேறு எமக்கு உண்டு. இருப்பினும் அதற்கெல்லாம் முன்பாக 1984 - ல் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். அது ஈழத்தமிழர் பிரச்னையும் இந்தித் திணிப்புப் பிரச்னையும் கொழுந்துவிட்டெரிந்த இன்னொரு கால கட்டம். அப்போது பொள்ளாச்சியில் நடந்த கூட்டமொன்றில் கலைஞர் முன்னிலையில் கோவை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் என்ற முறையில் நான் பேசுபோது, ‘‘மத்திய அரசுக்கு நாம் எந்த மொழியில் பேசினால் புரியும்? பிந்தரன்வாலேவின் மொழியில் பேசவேண்டுமா? அஸாம் உல்பாவின் மொழியில் பேசவேண்டுமா? நாகா இயக்க மொழியில்பேச வேண்டுமா? '' என்று பொறிந்து தள்ளிவிட்டேன். அந்த மூன்று மாநிலங்களிலும் தீவிரவாத இயக்கங்கள் தலையெடுத்திருந்த நேரம் அது. கலைஞர் பேசுகையில், ‘‘ தம்பி உமாபதி பேசியதைக் கேட்டேன். நான் இந்தி மொழி கூட வேண்டாம் என்கிறபோது நீங்கள் பிற மொழிகளைப் பற்றிப் பேசுகிறீர்களே? நமக்கு அண்ணா கற்றுத் தந்த அன்புமொழி, அமைதி மொழி இருக்கிறது. அதுபோதும்.. ஒரு காலம் வரும் அவர்கள் புரிந்துகொள்வார்கள்'' என்றார். கொதிப்போடு பேசும் இளைஞரின் பாதையை அமைதிப்பாதைக்குத் திருப்பத் தெரிந்த தலைவர் கலைஞர்.

ஞாபகம்

நடிகர் இளவரசு

என் தந்தை மலைச்சாமி 1967 -ல் திமுக சட்டமன்ற உறுப்பினர். அந்த காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ஓபி ராமனின் திருமணம் திண்டுக்கல் அங்குவிலாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. அப்போது சிறு பையனாக அப்பாவுடன் சென்றிருந்தேன். தன் தோள் மேல் ஏற்றி, மேடையில் இருப்பவர்களைக் காண்பித்து அதோ பார் கலைஞர், நாவலர், பேராசிரியர் என்று எனக்குக் காண்பித்தார். பின்னர் எமர்ஜென்சியில் என் தந்தை உள்ளிட்டவர்கள் மதுரையில் சிறையில் இருந்தார்கள். ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தோம். தூரத்தில் ஒரு கார் போனது. மக்களெல்லாம் கூடி கையசைக்க, முன்னிருக்கையில் இருந்து ஒரு முழுக்கை சட்டை அணிந்த கரம் வெளியே வந்து கையை அசைத்தது. பின் வரிசையில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். மறுநாள் முரசொலி பார்க்கையில்தான் அதில் பயணம் செய்த பெண்மணி அறிஞர் அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் என்பதும் காரை ஓட்டியவர் மு.கண்ணப்பன் என்பதும் தெரிந்தது. கலைஞருடன் இவர்கள் சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணத்துக்கு வந்து சென்றபோதுதான் நான் பார்த்தது. இந்த விவரங்களை கலைஞர் பற்றிய ஒரு டிவி நிகழ்ச்சியில் சொன்னேன். நேரடியாக அவரை அதற்கு முன்பு சந்தித்து தனியாக பேசியது இல்லை. விருதுகளை மேடையில் அவர் கையால் வாங்கியிருக்கிறேன். அவ்வளவுதான். அவரது வசனத்தை இளைஞன் படத்தில் பேசி நடிக்கும் வாய்ப்பு அதன் பின்னால் கிடைத்தது. இயக்குநர் மணிவண்ணனுடன் கலைஞர் அருகே சென்றேன். நம்மை அவருக்கு ஞாபகம் இருக்காது என்ற நினைப்புடன் வணங்கினேன். என்னை நிமிர்ந்து பார்த்தவர், ‘‘அன்று டிவி நிகழ்ச்சியில் மிக நன்றாகப் பேசினீர்கள்,'' என்ற சொற்களை உதிர்த்தார். அவ்வளவு மரியாதையுடன் என்னை நோக்கி அவர் சொன்னது என்றும் என் காதுகளில் ஒலிக்கும்!

படிகளை நனைத்த கண்ணீர்!

தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்

கலைஞர் அவர்களுடைய கனவுத்திட்டங்களான புதிய தலைமைச்செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை செம்மொழி மாநாடு, தஞ்சை பெரியகோயில் ஆயிரமாவது ஆண்டு விழா, சமச்சீர் கல்வி போன்ற பல விஷயங்களில் அவரது மேற்பார்வையில் பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய வேகத்துக்கு வேலை நடக்கவில்லை, நாங்களும் ஓடவில்லை என்றால் கோபப்படுவார்; சொல்லித்தருவார்; திருத்துவார். எவ்வளவோ சம்பவங்கள் இதில் உண்டு. ஆனால் ஒரு தலைவனாக மட்டுமில்லாமல் என்மீது தாயாகவும் பரிவு காட்டிய சம்பவம் ஒன்று உண்டு.

புதிய தலைமைச் செயலக வேலைகள் முடியும் தருவாயில் இருந்தன. அங்கே சட்டமன்றம் கூடுவதற்கான நாள் குறிக்கப்பட்டு நெருங்கிவிட்டது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு. சட்டமன்ற அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன.  நானும் அங்கே மேற்பார்வையில் இருந்துகொண்டிருந்தேன். மணி பதினொன்று ஆன நிலையில் என் செல் பேசி ஒலித்தது. முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி பேசினார்.

‘‘ எங்கே இருக்கீங்க சார்''

‘‘ சட்டமன்ற அரங்க வேலைகள் நடப்பதால் அங்கே இருக்கேன்''

‘‘ கூட வேறு யார் இருக்காங்க...?''

‘யாரும் இல்லை. இன்று ஞாயிறு.. அதிகாரிகள் மதியம் வரை இருந்துட்டுப் போயிருக்காங்க...''

‘‘ சரி வெச்சிடறேன்..''           

வேலை நடந்துகொண்டிருந்தது. உறுப்பினர்கள் அமர்வதற்கான இருக்கைகள் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தன. மணி பதினொன்றே முக்கால் ஆனபோது மீண்டும் செல்பேசி சிணுங்கியது.

முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிதான் பேசினார்.

‘‘அய்யா அங்கே வந்து கொண்டிருக்கிறார். நீங்க வாலாஜா சாலைப்பக்கம் வந்துவிடுங்கள்..''

நான் சற்று பதட்டமானேன். இந்நேரத்துக்கு வருகிறாரே.. அதுவும் ஞாயிற்றுக் கிழமை. என்ன சொல்லப்போகிறாரோ தெரியவில்லை.. பணிகளைப் பற்றி சுருக்கமாக அவரிடம் சொல்லவேண்டும். என்ன சொல்வது என்றெல்லாம் மனதுக்குள் தயார் செய்துகொண்டு விரைந்தேன். இப்போது வாலாஜா சாலைப்பக்கம் இருக்கும் பெரிய படிகள் அருகே மூச்சிரைக்க வந்துசேர்ந்த போது அண்ணா சிலையைத் தாண்டி தலைவரின் கார் வந்து  கட்டடப் படிகள் அருகே நின்றது. வேலை நடந்த இடத்திலிருந்து இங்கே வர கிட்டதட்ட அரை கிமீ தொலைவு இருக்கும். அதனால் மூச்சிரைத்தேன். காரின் கதவு திறக்கப்படவில்லை. கண்ணாடி மட்டும் கீழே இறங்கியது. உள்ளே முதல்வரும் அருகே துரைமுருகனும் இருந்தார்கள். நான் குனிந்து கட்டட வேலைகளைப் பற்றி சொல்ல வாய் திறந்தேன். கையை நீட்டித் தடுத்தார்.

‘‘நீ மட்டும் தனியாக இருக்கிறாய் என்று சொன்னார்கள். உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்றுதான் வந்தேன்'' என்றார். சில நொடிகள் அமைதியாக இருந்தோம். புன்னகைத்தார். கார் கிளம்பிச் சென்றுவிட்டது. நான் நெகிழ்ந்து உருகிப்போய் நின்றுகொண்டிருந்தேன்.

அவரோ ஒரு மாபெரும் மலைச்சிகரம். நான் யார்? ஒரு சாதாரணன். என் மேலும் அன்பு வைத்து இங்கே வந்து பார்த்து இந்த வார்த்தைகளைச்சொல்லிச் செல்வதெல்லாம் ஒரு மாபெரும் தலைவனுக்கே உரிய மாண்பல்லவா?

இன்றும் கண்ணீர் இன்றி இந்த சம்பவத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. புதிய தலைமைச் செயலகத்தின் அந்த உயர்ந்த அகலமான படிகளை என் கண்ணீரால் மானசீகமாக எப்போதும் நனைத்துக்கொண்டே இருப்பேன்.

தேர்தல் என்று வந்தால் மரத்துக்கும் கும்பிடுதான்!

மருத்துவர் எழிலன் நாகநாதன்

2012ஆம் ஆண்டுக்குப் பின்னால் கலைஞரை அடிக்கடி மருத்துவரீதியாகக் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்தது. அப்போது அவருடன் பல இரவுகள் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒவ்வொரு மருந்தும் சிகிச்சையும் எதற்கு என்று கேட்டுத் தெரிந்துகொள்வார். ஒரு ஆளை சடாரென எடைபோட்டுவிடுவார். அதன் பிறகு முழுமையாக நம்புவார். சினிமா, எம்ஜிஆர், அரசியல் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டே செல்வேன். நான் என்ன உரையாட விரும்புகிறேனோ அது தொடர்பாகவே அவர் பேசிக்கொண்டிருப்பார். அவர் நிறைய பேச விரும்பினார். சில நாட்கள் இரவு பத்துமணிக்கு ஆரம்பித்தால் ஒன்றரை மணி கூட ஆகிவிடும். சில நாட்கள் அவரால் பேசமுடியாது. இன்னொரு நாள் பேசலாம் என்பார். 1949 -ல் திமுக ஆரம்பித்து 1969 -ல் அவர் தலைவர் ஆகும் வரைக்குமான காலகட்டம் பற்றி அவரிடம் நிறையக் கேட்டுத்தெரிந்துகொள்ள ஆசை.

அவரிடம் அண்ணாவுக்கு அப்புறம் தலைவர் பதவிக்கு எப்படிப்பட்ட போட்டி இருந்தது என்று கேட்டேன். ‘‘போட்டியா?'' என்று சிரித்தார். எப்படி உங்களை எல்லோரும் ஆதரித்தார்கள்? என்று கேட்டபோது அவர் சொன்ன பல விஷயங்கள் அவரது அயராத உழைப்பை எடுத்துக் காண்பித்தன. கட்சி தொடங்கிய காலகட்டங்களில் ஆறு கிளைகள் ஆரம்பிக்கப் பட்டால் அங்கே ஒரு திமுக கொடிகம்பம் நடவேண்டும். கொடி தலைமைக் கழகத்தில் இருந்துதான் போகவேண்டும். இங்கிருந்து நாவலர், அன்பழகன், மதியழகன், கலைஞர் என யாராவது போவார்கள். மற்றவர்கள் கொடி ஏற்றிவிட்டுத் திரும்பிவிடுவர். ஆனால் கலைஞர் அன்று பகல் இரவு என அங்கேயே தங்கி ஆறு கிளைச்செயலர்கள், கட்சி உறுப்பினர்கள் என எல்லோருடனும் உண்டு உறங்கி, அளாவளாவி விட்டுத் தான் திரும்பி வருவார். அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் கலைஞருக்கு நெருக்கமான கிளைகளின் செயல்வீரர்கள் ஒன்றியம், மாவட்டம் என கட்சிக்குள் பதவி உயர்வு பெற்று வளர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தன்னை தலைவர் பதவிக்கு ஆதரிக்க முன்வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

நான் தியாகதுர்க்கம் என்ற ஊரில் களப்பணிக்குச் சென்றபோது ராமகிருஷ்ணன் என்ற 90 வயதைத் தாண்டிய திமுக உறுப்பினரைச் சந்தித்தேன். அவர் கறுப்புத்துண்டுதான் அணிவார். கறுப்பு சிவப்பு குறிகளை அணியமாட்டார். அவரிடம் பேசியபோது அறுபதுகளுக்கு முன்பாக அண்ணா, கலைஞர் உள்ளிட்ட எட்டுபேர் ஒன்றாகச் சேர்ந்து Guns of Navarone சினிமா பார்த்த நினைவுகளைச் சொன்னார். அப்போதைய புகைப்படங்களையும் காண்பித்தார். கலைஞரை சந்தித்தபோது தியாகதுர்க்கத்தில் ஒருவரைப் பார்த்தேன் என்று சொன்னேன். உடனே சடாரென... ‘‘குட்டை ராமகிருஷ்ணனா? தியேட்டர் கூட வெச்சிருப்பாரே...'' என்று சொன்னார். இந்த ஞாபக சக்தி அவருக்கு பெரும் கொடை.

தான் காலையில் நாலரை மணிக்கே எழுந்துவிடுவதால் பெரும்பாலான அன்றாட பணிகளை பத்து மணிக்குள் முடித்துவிடுவதாகவும் அதன் பிறகு இருக்கும் நேரத்தை பிற பணிகளுக்குத் திட்டமிட பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறினார். பலருக்கு வேலையே காலை பத்துமணிக்குத்தான் ஆரம்பமாகும். ஆனால் கலைஞர் பத்துமணிக்கு வேலைகளை முடித்துவிடுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு நேரம் எதிர்கால திட்டமிடல்களுக்குக் கிடைத்திருக்கும் என யோசிக்க முடிகிறது.

அரசின் ஒவ்வொரு துறை குறித்தும் அவருக்கு தனிப்பட்ட முறையில் நேரடி தகவல்கள் தர அந்தந்த துறை சார்ந்த நபர்கள் ஐந்தாறு பேர் இருந்தனர். அவர்களின் எண்களெல்லாம் ஒரு டைரியில் குறித்து வைத்திருப்பார். ஒரு துறை சார்ந்த கூட்டம் என்றால் அன்று காலையே தன் ஆட்களிடம் பேசி விவரங்களை அறிந்துகொண்டுவிடுவார். கூட்டத்தின்போது  அதிகாரிகளைத் தகவல்களைச் சொல்லி மிரளவைப்பார். தகவல் தரும் நபர்கள் யாரென்பது ரகசியமாகவே இருக்கும்.  இதெல்லாம் அவரிடம் பேசி நான் தெரிந்துகொண்டவை.

அவரிடம் இருந்த மிகப்பெரிய பண்பு அவரது ‘மாஸ் உளவியல்' அறியும் பண்பு. அவர் 35000 பேர் கொண்ட கூட்டமாக இருந்தாலும்கூட அதன் உளவியலைக் கணித்துவிடுவார். தனி நபர்கள் எல்லாம் அவர் முன் நிற்கமுடியுமா?

ஒருமுறை அவர் சொன்னார்: ‘‘ தேர்தல்னு வந்துட்டா மரத்தைப்  பார்த்தால் கூட கும்பிடணும்யா...' அவர் சிரிக்காமல்தான் சொன்னார். அந்த இரவில் என்னால்தான் சிரிப்பை அடக்க முடியவில்லை!

செப்டெம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com